திருப்பதி -திருமலை இடையே சுற்றுச்சூழலை பாதிக்காத பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பேருந்துகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மூலம் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் திருமலையில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மேலும், பக்தர்களும் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். திருமலையில் வாழும் வன விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, திருப்பதியில் இருந்து திருமலைக்கு பேட்டரியில் இயங்கும் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேற்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் விளக்கினர்.
முன்னதாக திருமலையில் உள்ள அறங்காவலர் குழு தலைவர் அலுவலகத்தில் இருந்துஅன்னமயா பவன் வரை பேட்டரி பேருந்தில் பயணித்துசுப்பா ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது, போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர்செங்கல்வ ரெட்டி, போக்கு
வரத்து துறை அதிகாரிகள் நரசிம்முலு, சீனிவாஸ், சந்திர சேகர்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், சுப்பா ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு டீசல் மூலம் இயக்கப்பட்டு வரும் வாகனங்களைக் காட்டிலும் பேட்டரி வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது உள்ள டீசல் பேருந்துகளை பேட்டரி பேருந்துகளாக பெங்களூருவில் உள்ள வீரா வாகனா உத்யோக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் மாற்றப்பட்டுள் ளது. பேட்டரி பேருந்துகள் திருப்பதி - திருமலை இடையே மலைப்பாதையில் கடந்த 2 நாட்களாக ஒரு நாளைக்கு மூன்று முறை சோதனை முறையில் இயக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துக்கு ஒருமுறை சார்ஜிங் செய்தால் சுமார் 170 கி.மீ வரை பயணம் செய்யலாம்” என்றார்.