குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து அப்போது அமைச்சராக இருந்த அமித் ஷா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோது அரசியல் உள்நோக்கம் என்று சொல்லாத பாஜக, இப்போது அர்னாப் கோஸாமி கைது செய்யப்பட்ட நிலையில் அரசியல் உள்நோக்கம் கொண்டது என பேசுவது ஏன் என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் ரிபப்ளிக் சேனலுக்கு உள்ளரங்கு அலங்காரம் செய்துகொடுத்த அன்வே நாயக் என்பவருக்கு உரிய கட்டணத்தை ரிபப்ளிக் சேனல் செலுத்தவில்லை. இதனால் மனமுடைந்த அன்வே நாயக் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு காரணமாக ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸாமி உள்ளிட்டோர் மீது அன்வே நாயக் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி நடந்தபோது இந்த வழக்கில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை தற்போது விசாரித்த ராய்காட் போலீஸார் கடந்த புதன்கிழமை அர்னாப் கோஸாமியைக் கைது செய்தனர். அவர் நவம்பர் 19-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அர்னாப் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பாஜக, இது அரசியல் நோக்கம்கொண்டது என்றும், பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் செயல், காங்கிரஸ் ஆட்சியின்போது அவசரநிலையை நினைவுபடுத்தியது என்று விமர்சித்ததது.
பாஜகவின் விமர்சனத்துக்கு பதில் அளித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் ரிபப்ளிக் சேனல் குறித்தோ, அர்னாப் பெயர் குறித்து ஏதும் தெரிவிக்காமல் மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் செயல்பாடுகள் போல் பாஜகவின் செயல்பாடு இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பொய்ச் செய்திகளை பரப்பி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி ட்ரம்ப் நீதிமன்றத்தில் அமெரிக்க மாண்பைக் காக்க மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல, மகாராஷ்டிராவில் பாஜக தலைவர்கள், தற்கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய ஒரு நபர் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோதுதான் கோத்ரா வன்முறை நடந்தது. அப்போது பாஜக தலைவர்கள், குறிப்பாக இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா உள்பட பலர் மீது கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன..
ஆனால், அவர்கள் சட்டப் போராட்டம் நடத்தி விடுதலையானார்கள். அப்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டபோது, அது அரசியல் பழிவாங்கல், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக ஏன் கூறவில்லை.
தற்கொலைசெய்து கொண்ட அன்வே நாயக்கின் குடும்பத்தினரை அவமானப்படுத்தும் நோக்கில் பாஜகவினர் செயல்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் உத்தவ் தாக்கரேவை, கடந்த 1975-ல் அவசரநிலை கொண்டுவந்த இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு சிலர் சுவரொட்டிகள் அடித்து ஒட்டியுள்ளார்கள். இது சிறுபிள்ளைத்தனமான செயல்மட்டுமல்ல, அறியாமையும் கூட.
இருந்தாலும் இந்திரா காந்தி போன்ற மிகப்பெரிய தலைவருடன் உத்தவ் தாக்கரேவை ஒப்பிட்டது பெருமையாக்குரியதுதான். கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றிதேடித் தந்ததும் இந்திரா காந்தி தலைமைதானே.
குறிப்பிட்ட ஒருவர் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை கறுப்பு பட்டை அணியப் போவதாக பாஜகவினர் கூறியதற்கு நன்றி. அதுமட்டுமல்லாமல், போராட்டமும், உண்ணாவிரதமும்கூட இருக்கலாம்
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டது.