வைக்கோல் எரிப்பினால் காற்று மாசுபாடு என்ற போர்வையில் விவசாயிகள் மீதான அட்டூழியங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நெல், கோதுமை போன்ற தானியங்களை அறுவடை செய்தபின் எஞ்சியிருக்கும் வைக்கோல் போன்ற விவசாயக் கழிவுகளைத் தீவைத்து எரிப்பது வழக்கம். இதனால் பரவலாக காற்று மாசு ஏற்படுவதாக விவசாயிகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.
சில தினங்களுக்கு முன்பு, உ.பி.அரசு வைக்கோல் கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் வழக்கை எதிர்கொள்வார்கள் என்றும், அவர்கள் அடுத்துவரும் 3 ஆண்டுகளுக்கு அரசு திட்டங்களின் நன்மைகளைப் பெற முடியாது என்றும் தெரிவித்திருந்தது.
பஞ்சாப் மாநிலத்திலும் இது தொடர்பாக 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது. இதற்குப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்றைய ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
"உத்தரப் பிரதேசத்தில் பரவியுள்ள மாசு காரணமாக விவசாயிகள் மீதான அட்டூழியங்கள் கண்டிக்கத்தக்கவை. குறிப்பாக வைக்கால் எரிப்பதால் மாசு ஏற்படுகிறது என்ற போர்வையில் வைக்கோல் எரிப்பைக் காரணம் காட்டி விவசாயிகளைத் துன்புறுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இப்பிரச்சினையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், அரசாங்கம் அவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிகொடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இது பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை.''
இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.
விவசாய எச்சங்களைப் பயன்படுத்துவதற்கான புதிய சோதனைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும், எரிபொருளைத் தயாரிக்கும் திட்டங்கள், வைக்கோலிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகள் தற்போது உத்தரப் பிரதேசத்தில் முன்மொழியப்பட்டு வருகின்றன.