சத்தீஸ்கர் மாநில கைவினைக் கலைஞர், 24 மணி நேரமும் சுடர்விட்டு எரியும் மேஜிக் மண் விளக்கை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார். இந்த விளக்கை வாங்குவதற்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், கெண்டாகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட கைவினைக் கலைஞர் அசோக் சக்கரதாரி (62). இவர், தொடர்ந்து சுடர்விட்டு எரியும் மண் விளக்கை உருவாக்க தீவிர முயற்சிகள் செய்து வந்தார். அதன் பலனாக 24 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை கூட தொடர்ந்து சுடர்விட்டு எரியும் மண் விளக்கை உருவாக்கி உள்ளார் அசோக்.
குடுவைப் போன்ற அமைப்பில் அகல்விளக்கை இணைத்து புதிய மாடலில் இவர் உருவாக்கி உள்ளார். குடுவையில் இருந்து எண்ணெய் தானாக அகல்விளக்கில் சொட்டு சொட்டாக விழும் வகையில் அசோக் வடிவமைத்துள்ளார். இதற்கு ‘மேஜிக் லேம்ப்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விளக்கு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து அசோக் சக்கரதாரி கூறியதாவது:
யூடியூப்பில் பல வீடியோக்களைப் பார்ப்பேன். கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு புதிய வடிவில் விளக்கு தயாரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான், எண்ணெய் தொடர்ந்து எரிவதற்கு தேவையான எண்ணெய் தானாகவே செல்லும் வகையில் இருந்த விளக்கு ஒன்றை பார்த்தேன். அதேபோல நுட்பத்துடன் கூடிய பல வீடியோக்களைப் பார்த்து இந்த விளக்கை வடிவமைத்தேன். அது சரியாக வேலை செய்தது. இந்த விளக்கை வாங்க ஏராளமான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன’’ என்றார்.