ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து நாளை பிற்பகல் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் இன்று நண்பகல் 1.02 மணிக்குத் தொடங்கியது.
இந்த ஆண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட முதல் ராக்கெட், செயற்கைக்கோள் இதுவாகும். 51-வது பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் நாளை செலுத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 76-வது ராக்கெட் இதுவாகும்.
இஓஎஸ்-01 எனும் நவீனரக புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 9 சர்வதேச செயற்கைக்கோள்களையும் சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ராக்கெட் ஏவும் பணிகள் தடைபட்டன. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி நிலையத்திலுருந்து இஓஎஸ்-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ பி.எஸ்.எல்.வி -சி49 ராக்கெட் மூலம் நவம்பர் மாதம் 7ம் தேதி(நாளை) விண்ணில் செலுத்த உள்ளது.
இதனுடன் இணைந்து வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இ.ஓ.எஸ்- 01 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளையும் துல்லியமாக மேற்கொள்ளும்.
கரோனா பரவல் காரணமாக பார்வையாளர்கள் ராக்கெட் ஏவுதலை பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
நியூஸ்பேஸ் இந்தியா லிமிட்(என்எஸ்எல்எல்) நிறுவனத்துடன் விண்வெளித்துறை செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 9 சர்வதேச செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட்டில் இணைத்து விண்ணில் செலுத்தப்படுகின்றன.
இதில் ஒரு செயற்கைக்கோள் லிதுவேனியாவைச் சேர்ந்தது, 4 செயற்கைக்கோள் லக்சம்பர்க்கைச் சேர்ந்தது, மற்றவை அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.