சிராக் பாஸ்வான் 
இந்தியா

வாக்கு இயந்திரத்தைக் குறை சொல்வதன் மூலம் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்: காங்கிரஸ் கூட்டணிககு சிராக் பாஸ்வான் பதிலடி

பிடிஐ

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் குறை சொல்வதன் மூலம் தங்களது தோல்வியைக் காங்கிரஸ் கூட்டணி ஒப்புக் கொண்டுள்ளதாக லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் விமர்சித்துள்ளார்.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்டப் பிரச்சாரம் நேற்று முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 7) நடைபெற உள்ளது.

இறுதிக்கட்டப் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கூட்டணியினர் மின்னணு இயந்திரத்தின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையில்லை என்று தெரிவித்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஈவிஎம் மின்னணு வாக்குப்பதிவு (ஈவிஎம்) இயந்திரத்தை மோடி வாக்குப்பதிவு இயந்திரம் (எம்விஎம்) என்று விமர்சித்தார். இது அரசியல் கட்சிகளிடையே சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதமாக லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வான் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈவிஎம்) தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றன. ஆனால், அவர்கள் அரசாங்கத்தை அமைத்தபோது ஒருபோதும் ஈவிஎம் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பவில்லை. சட்டப்பேரவைக் கூட்டங்களில்கூட இதைப்பற்றி விவாதிக்கவும் இல்லை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈவிஎம்) தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி எழுப்பி வரும் கேள்விகள், அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டதைக் காட்டுகின்றன. இதன் மூலம் அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். பாஜக-லோக் ஜனசக்தி கட்சிக்கு அடுத்த கட்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இது ஒரு நல்ல அறிகுறி ஆகும்''.

இவ்வாறு சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

243 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் பிஹார் மாநிலத்தில் இக்கட்சி பெரும்பாலும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு தனது கட்சி பாஜகவுடன் அரசாங்கத்தை அமைக்கும் என்று சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT