மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையில் பணி அளிப்பதாக 27,000 பேர்களிடம் ரூ.1.09 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. போலி இணையதளம் உருவாக்கி இதை செய்த 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்டில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையில் ’ஸ்வாஸ்தா ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான்(எஸ்ஏஜேகேஎஸ்)’ திட்டத்திற்காக என sajks.org எனும் போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 13,000 பணியிடங்கள் இருப்பதாக அதில் அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது. இதை நாடு முழுவதிலும் இருந்து சுமார் 27,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இணையவழி நுழைவுத்தேர்வும் நடத்துவதாகக் கூறி பதிவுக்கட்டணமான ரூ.400 முதல் 500 வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதில், சிலருக்கு மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தி உள்ளனர். இவர்கள் தாம் ஏமாற்றப்பட்டது தெரியாமல் பணி உத்தரவிற்கும் காத்திருந்தனர். ஆனால், எதுவும் வராதமையால் சிலர் டெல்லி போலீஸாரிடம் புகார் செய்தனர்.
இதை விசாரித்த டெல்லியின் சைபர் கிரைம் பிரிவு, விஷ்ணு சர்மா என்பவர் தலைமையில் செயல்பட்ட ஆறு பேர் கொண்ட மோசடி கும்பலை நேற்று கைது செய்துள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.49 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி சைபர் கிரைம் பிரிவின் துணை ஆணையரான அணீஷ் ராய் கூறும்போது, ‘ஹரியானாவின் ஹிசாரில் இருந்து இந்த போலி இணையதளம் இயக்கப்பட்டு வந்துள்ளது. இதற்காக பல வங்கிகளில் போலி கணக்குகள் துவக்கப்பட்டிருந்தன.
இதன் விண்ணப்பதாரர்களின் தொடர்பு எண்களை பல்வேறு அரசு நுழைவுத்தேர்வு இணையதளங்களில் இருந்து எடுத்துள்ளனர். இவர்களை தம் வலையில் சிக்கவைப்பதற்காக
சுமார் 15 லட்சம் பேர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளனர்.’ எனத் தெரிவித்தார்.
இந்த ரூ.1.09 மோசடியின் மற்ற குற்றவாளிகளான ராம்தாரி, சுரேந்தர்சிங், அமன்தீப் கட்கரி, சந்தீப் மற்றும் ஜோகீந்தர்சிங் ஆகியோர் டெல்லி மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல், மத்திய அரசின் துறைகள் பெயரில் பெரும் தொகைகள் மோசடி செய்யப்படுவது முதன் முறையல்ல. இதற்கு முன் மத்திய விவசாயத்துறையின் திட்டங்களின் பெயரிலும் மோசடி நடைபெற்றுள்ளது.
எனவே, அரசு பணிகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்காக, டெல்லி காவல்துறையின் சார்பில் ஒரு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், விண்ணப்பிப்பதற்கு முன்பாக அந்த இணையதளங்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முயல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது