போக்குவரத்து துறையை கணினிமயமாக்கும் மற்றும் வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுக்கும் புதிய சாலை பாதுகாப்பு மசோதாவை சுயநல சக்திகள் எதிர்க்கின்றன என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டினார்.
சாலைப் போக்குவரத்து தொடர்பாக டெல்லியில்நடைபெற்ற கருத்தரங்கில் கட்கரி பேசியதாவது:
‘சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா, 2015’-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த நாங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதும் அது முடியாமல் போய்விட்டது. அரசியல் சாசனத்தின் பொதுப் பட்டியலில் சாலைப் போக்குவரத்து உள்ளது. எனவே இதில் சட்டம் இயற்றும் உரிமை மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ளது. இந்நிலையில் பல்வேறு ‘லாபி’கள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் சாலைப் போக்குவரத்து தொடர்புடைய அனைத்தும் கணினிமயமாகும். ஊழல் ஒழியும். வெளிப்படைத் தன்மையும் மக்களுக்கு அதிக பயன்களும் ஏற்படும். ஓட்டுநர் உரிமங்களுக்கான பொறுப்பை இந்த சட்டம் ஏற்கும். சுயநல சக்திகள் இந்த மசோதாவை எதிர்க்கின்றன. ஆனால் இதை சட்டமாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
விபத்தில்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதியேற்றுள்ளது. கார்ட்டூன்கள், பாடங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஆமிர்கான் போன்ற பிரபலங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கவும் போலி ஒட்டுநர் உரிமங்களை தடுக்கவும் புதிய மசோதா வழிசெய்கிறது. வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேறும் என நம்புகிறோம்.
இந்த மசோதாவை எதிர்க்கும் சில மாநிலங்கள் தங்கள் நிர்வாக மற்றும் நிதி உரிமைகளுக்கு எதிராக இந்த மசோதா அமைந்துள்ளதாக கூறுகின்றனர். உலகின் மிகச் சிறந்த நடைமுறைகளை இந்த மசோதா கொண்டுள்ளது. தேசிய சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆணையம் அமைக்க இந்த மசோதா வழிகோலுகிறது. வாகனங்களை ஒழுங்கு செய்தல் மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரங்களையும் இந்த ஆணையம் ஏற்கும்.
இவ்வாறு கட்கரி பேசினார்.