பிஹார் மாநிலத்தை தன்னால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்பதை முதல்வர் நிதிஷ் குமார் ஒப்புக் கொண்டு விட்டார் என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
பிஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. அக்டோபர் 28 மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. கடைசி மற்றும் 3-ம் கட்டத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது. முடிவுகள் வரும் 10- ம் தேதி வெளியாக உள்ளது.
கடைசிக்கட்டத்தில் சீமாஞ்சல் பகுதியின் 78 தொகுதிகளுக்கானத் தேர்தல் நடைபெறுகிறது.
இங்கு கடைசிநாள் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கானப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் புர்னியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிதிஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
லாலுபிரசாத் யாதவ், அவரின் மனைவி ராப்ரி தேவி இருவரும் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்து பிஹார் மாநிலத்தை அழித்தனர். 15 ஆண்டுகளில் லாலுபிரசாத் யாதவ் வேலைவாய்ப்பு வழங்காத நிலையில், தேஜஸ்வி யாதவ் எவ்வாறு 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவார்.
என்னுடைய 6 ஆண்டுகள் ஆட்சியுடன் ஒப்பிடும்போது, அவர்கள் 95 ஆயிரம் வேலைவாய்ப்புகள்தான் வழங்கியுள்ளனர். பிஹாரின் வளர்ச்சிக்காகவே நாங்கள் உழைத்து வருகிறோம். இந்த மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதையே நோக்கமாக கொண்டுள்ளோம். இந்த தேர்தல் தான் எனக்கு கடைசி தேர்தல்.’’ எனக் கூறினார்.
இதுகுறித்து ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
பிஹார் மாநிலத்தை நிர்வகிக்கும் திறன் நிதிஷ் குமாருக்கு இல்லை. இதனை நீண்ட காலமாகவே நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் இப்போது அவரே அதனை ஒப்புக் கொண்டு விட்டார். இது தான் கடைசி தேர்தல் என்று கூறி விட்டார். மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்பதை அவர் தெரிந்துள்ளார். நடைமுறை அவருக்கு புரிந்து விட்டது.’’ எனக் கூறினார்.