மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி மீது பெரிய அளவில் பொதுமக்களுக்கு கோபம் உள்ளதை தன்னால் உணர முடிகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ள அமித் ஷா பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர் இல்லத்தில் அவர்கள் குடும்பத்துடன் மதிய உணவு எடுத்துக் கொள்கிறார் அமித் ஷா.
பிர்சா முண்டா என்ற புரட்சியாளரின் சிலைக்கு மாலையிட்டுப் பேசிய அமித் ஷா, “கடந்த இரவு முதல் மேற்கு வங்கத்தில் இருக்கிறேன். மம்தா பானர்ஜி ஆட்சிக்கு எதிரான பெரிய கோபத்தை மக்களிடத்தில் பார்க்கிறேன். ஒரு பக்கம் விரக்தியிலிருந்தாலும் மறுபக்கம் பிரதமர் மோடி தலைமையிலான மாற்றம் நிச்சயம் நம்பிக்கையளிப்பதையும் மக்கள் உணர்கின்றனர்.
பாஜக தொண்டர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துப்படும் அராஜகங்கள், வன்முறைகள் அவரது ஆட்சிக்கான சாவுமணியாகவே நான் பார்க்கிறேன்
அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயமாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாகக் கூறுகிறேன்.
மத்திய அரசின் ஏழைகளுக்கான திட்டங்கள் மம்தா ஆட்சியில் ஏழைகளுக்குச் செல்வதில்லை. 80க்கும் அதிகமான திட்டங்கள், ஏழைகள், பழங்குடியினருக்காக மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இவை எதுவும் மம்தா ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.
மத்திய அரசின் திட்டங்களை மறைப்பதன் மூலம் அவர் பாஜக வெற்றியைத் தடுத்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார். ஆனால் அவருக்கு நான் கூறுவது என்னவெனில் மத்திய அரசின் திட்டங்களை ஏழைகளுக்குக் கொண்டு சென்றால் அவர்கள் மம்தாவையும் மதிப்பார்கள்.
மேற்கு வங்கத்தில் அமித் ஷா பல சாதி சமூகத்தின், குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளார். அப்படியே பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர் வீட்டில் ‘லஞ்ச்’ எடுத்துக் கொள்கிறார் அமித் ஷா.
மேற்கு வங்க பழங்குடியினர் பகுதியில் பாஜகவுக்கு நல்ல பிடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.