இந்தியா

பிஹாரில் கடைசிநாள் பிரச்சாரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ராமர் கோயில் பிரச்சனையை எழுப்பும் பாஜக

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரில் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கடைசிகட்ட தேர்தலுக்கான இறுதிநாள் பிரச்சாரம் இன்று நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(பி.ஓ.கே), ராமர் கோயில் பிரச்சனைகளை பாஜக எழுப்பியுள்ளது.

இம்மாநில சட்டப்பேரவைக்கானக் கடைசிக்கட்டத்தில் சீமாஞ்சல் பகுதியின் 78 தொகுதிகளுக்கானத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முஸ்லிம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.

இங்கு கடைசிநாள் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கானப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் பேசி வருகிறார்.

பிஹாரின் முசாபர்பூரில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் கூறும்போது, ‘பி.ஓ.கே என்பது இந்தியாவின் ஒரு நிரந்தர அங்கம் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

அது நேற்றும் இந்தியாவிடன் இருந்தது. இன்றும் இருக்கும், நாளையும் எங்களுடையதே. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான் 370 ஐ நீக்கியதும், ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படுவதும் எங்கள் அரசின் சாதனை ஆகும்.’ எனத் தெரிவித்தார்.

இதன் மீது அமைச்சர் ராஜ்நாத் மேலும் கூறும்போது, ‘நாட்டின் பிரிவினையை இந்து, முஸ்லிம் என மதரீதியாக நடத்துவதை எவரும் விரும்பவில்லை. ஆனால், அது பிரிட்டிஷ் அரசின் சதியால் அவ்வாறு பிரிக்கப்பட்டு விட்டது.’ எனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் போட்டியிடும் என் டிஏ கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளரான மீண்டும் நிதிஷ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக மெகா கூட்டணியில் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு முன் கடந்த நவம்பர் 3 மற்றும் அக்டோபர் 28 இல் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்றன. இதன் முடிவுகள் வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT