மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க தொடர்ந்து 2வது நாளாக மீட்புப் பணியாளர்கள்
போராடி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தில் பிருத்விப்பூர் பகுதியின் சேதுபுரபரா கிராமத்தில் புதன்கிழமை நடந்துள்ள இச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பதற்றத்திற்குள் ஆழ்த்தி வருகிறது.
சம்பவத்தின்போது, திறந்தவெளியில் 3 வயதுக்கும் குறைவான ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. இக்குழந்தை அருகில் இருந்த 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ள குழந்தையை மீட்க, மத்தியப் பிரதேச மாநில பேரிடர் மீட்புப் பணியாளர்களும் மற்றும் ராணுவமும் இணைந்து போராடி வருகின்றன.
2வது நாளாக இன்றும் குழந்தையை மீட்க தீவிரமான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஆழ்துளைக் கிணற்றில் அடியில் இருந்து 100 அடி வரை உயரம் வரை தண்ணீர் உள்ளது, எனவே குழந்தை எந்த பகுதியில் உள்ளே சிக்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எனினும் தொடர்ந்து போராடி வருகிறோம். பேரிடர் மீட்பு பணியாளர்கள், ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாக ஊழியர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். '' என்று தெரிவித்தனர்.
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
''மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு சிறுவன் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான், உள்ளூர் நிர்வாகத்துடன் ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
விரைவில் இக் குழந்தை பாதுகாப்பாக வெளியே எடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன். இக்குழந்தையின் நீண்ட ஆயுளுக்கு நிச்சயம் கடவுள் ஆசீர்வதிப்பார். அக்குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.''
இவ்வாறு மத்திய பிரதேச முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.