இந்தியா

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் புதிய முதலீடுகள் ஈர்ப்பதில் முதலிடத்தை பிடித்த தமிழகம்

செய்திப்பிரிவு

புதிதாக முதலீடுகள் ஈர்ப்பதில் நடப்பு நிதி ஆண்டின் அரையாண்டு காலத்தில் பிற இந்திய மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் முன்னிலை வகிப்பதாக கேர் ரேட்டிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவுக்குள் செய்யப்பட்டுள்ள புதிய முதலீடுகளில் தமிழகம் 16 சதவீதம் பங்கு வகிப்பதாக கேர் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மதிப்பளவில் ரூ.20 ஆயிரம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகம் கடந்த மே 27-ம் தேதி 17 புரிந்துணர்வு தொழில் ஒப்பந்தங்களை மேற்கொண்டது. கடந்த மாத இறுதியில் ரூ.10,062 கோடி திட்டங்களுக்கு தமிழக அரசு அடிக்கல் நாட்டியுள்ளது. இதன் மூலம் 18,000 வரை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஆந்திரப் பிரதேசம் 11 சதவீதமும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா மூன்றும் தலா 7 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பாண்டில் புதிய முதலீடுகள் சரிவைச் சந்தித்துள்ளன. புதிய முதலீடுகள் முந்தைய ஆண்டு ரூ.4.8 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

SCROLL FOR NEXT