பிரதமரின் மக்கள் மருந்தகம் (ஜன் அவுஷதி) திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் நடப்பு நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் ரூ.358 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை ஆகியுள்ளதாக மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழி செய்யும் திட்டம்தான் பிரதமரின் ஜன் அவுஷதி திட்டம். ரசாயனம் மற்றும் உரத் துறை மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா, பிரதம மந்திரியின் பாரதிய ஜன் அவுஷதி பாரியோஜனா திட்டத்தின் செயல்பாடு குறித்து மதிப்பாய்வு செய்யும் கூட்டத்தை செவ்வாய் அன்று நிகழ்த்தினார்.
அக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘நடப்பு நிதி ஆண்டில் அக்டோபர் 31 வரையிலான 7 மாதங்களில் ஜன் அவுஷதி மருந்தகங்கள் மூலம் ரூ.358 கோடி மருந்துகள் விற்பனை ஆகியுள்ளது’’ என்று தெரிவித்தார். மேலும் நடப்பு நிதி ஆண்டில் விற்பனை ரூ.600 கோடி என்ற இலக்கை எட்டும் எனவும் கூறினார்.
இந்த இலக்கை எட்டுவதற்கு ஜன் அவுஷதி திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். குறைந்த விலையில் தரமான மருந்துகள் ஜன் அவுஷதி மருந்தகங்களில் கிடைக்கும் விஷயத்தை முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கேற்ப எந்த தடையுமின்றி வேண்டிய மருந்துகள் கிடைக்கும் வகையில் விநியோக சங்கிலி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கான செயல்திட்டத்தை தயாரிக்குமாறு ஜன் அவுஷதி திட்டத்தை செயல்படுத்தி வரும் அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பணியகத்திடம் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.