இந்தியா

மோடி வெற்றி மாயை வெகு விரைவில் உடைந்து போகும் - சீதாராம் யெச்சூரி

செய்திப்பிரிவு

நரேந்திர மோடியை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ள அனைத்து மாயைகளும் விரைவில் உடைந்து போகும். பாஜக வெற்றிக்கு நிதியளித்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நேரம் நெருங்கி வந்துவிட்டது, இது மக்களுக்கு மேலும் சுமையையே ஏற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று சிபிஎம் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

”இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நிதிமுதலீடு செய்தவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நேரத்தில் நாம் இருக்கிறோம், இதனால் மக்கள் மீது சுமை அதிகரிக்கும். புதிய ஆட்சி மக்களுக்கு நிம்மதி அளிக்கும் என்பது மாயை என புரியவரும்.

பிரச்சாரத்தின் அடிநாதமாக இயங்கிய மதவாதச் சக்திகள் மத வேற்றுமைகளை இன்னும் கூர்மையாக்கவே செய்யும். இது நமது மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவே முடியப்போகிறது.

இந்த புதிய பொருளாதாரச் சுமை மற்றும் மதவாதம் என்ற இரண்டையும் மக்கள் எவ்வாறு சந்திக்கப்போகிறார்கள் என்பதுதான் மக்களின் புதிய சவால்.

பாஜக பண ஆதிக்கம் மற்றும் ஊடக ஊதிப்பெருக்கம் ஆகியவற்றைக் கொண்டு பிரச்சாரத்தை திறம்பட மேற்கொண்டது. நரேந்திர மோடியை இந்துத்துவா செயல்திட்டம், ”வளர்ச்சி”, ”நல்லாட்சி”போன்ற கோஷங்களினால் வளர்த்தெடுத்துள்ளனர். இதனுடன் குஜராத்தை ஏதோ பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும் பூவுலக சொர்க்கம் போலவே சித்தரித்தனர்.

குஜராத் என்ற இடம் அதன் முதன்மைக் கடவுள் மோடி என்று பிரச்சார முழக்கம் மேற்கொள்ளப்பட்டது. இது அயோத்தி, ராமர் என்ற பிரச்சார உத்தியிலிருந்து வேறுபட்டது. மாறாக மோடி குறித்த இந்தப் பிம்ப மாயையை எதிர்கொள்ள திராணியற்ற கட்சியாக காங்கிரஸ் கட்சியின் பிரச்சார உத்தி பலவீனத்தின் உச்சகட்டத்தில் இருந்தது. அதன் தலைமை அதன் வேட்பாளர்களையே உற்சாகப்படுத்தத் தவறிவிட்டது”

என்று சிபிஎம் கட்சிப் பத்திரிக்கையில் சீதாராம் யெச்சூரி எழுதிய தலையங்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT