மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) டெல்லி சிறப்பு காவல் நிறுவன (டிஎஸ்பிஇ) சட்டத்தின் கீழ் இயங்குகிறது. எந்த ஒரு மாநிலத்திலும் விசாரணை நடத்துவதற்கு அந்த மாநில அரசின் பொதுவான ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதல் அவ்வப்போது புதுப்பிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2018-ல்சிபிஐ அமைப்புக்கான பொதுவான ஒப்புதலை மேற்கு வங்கஅரசு திரும்பப் பெற்றது. எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்காக சிபிஐ அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது.
இதையடுத்து, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் அரசுகளும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றன. இதுபோல, மகாராஷ்டி ராவில் சமீபத்தில் எழுந்த தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்த நிலையில், அம்மாநில அரசும் சிபிஐ அமைப்புக்கான ஒப்புதலை வாபஸ் பெற்றது.
இந்நிலையில், கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மோதல்நிலவி வந்த நிலையில், சிபிஐ அமைப்புக்கான அனுமதியை கேரள அரசு நேற்று வாபஸ் பெற்றது. முன்னதாக, அமைச்சர வையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இனிமேல், கேரளாவில் சிபிஐ வழக்கு பதிவு செய்ய மாநில அரசிடம் முன்அனுமதி பெற வேண்டியது அவசியம்.