மத்திய அரசு எங்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மத்தியில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் தலைமையிலான ஒரு குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அமரீந்தர் சிங் தலைமையில், பஞ்சாபில் இருந்து அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் தர்ணா நடத்தினர்.
முன்னதாக ராஜ்காட் பகுதிக்குச் செல்ல முயன்றபோது, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திக்கொள்ளும்படி போலீஸார் ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஜந்தர் மந்தர் பகுதியில் பஞ்சாப் எம்எல்ஏக்கள் திரண்டனர்.
தலைமையேற்று நடத்திய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஆர்ப்பாட்டத்தின்போது பேசியதாவது:
மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு பெரியபெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் சட்டங்கள் என்பதாலேயே நாங்கள் எதிர்கிறோம்.
இங்கு பல்வேறு கட்சிகளும் எங்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தையும் எங்கள் விவசாயப் பெருமக்களை காக்கவும்தான் நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது முற்றுகையை தளர்த்திய பின்னரும் கூட சரக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்று ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக நிலக்கரி, யூரியா / டிஏபி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் இல்லாததால் பஞ்சாப் நிலைமை மோசமாக உள்ளது . இதனால் பஞ்சாப் மக்கள் ஒரு இருண்ட பண்டிகைக் காலத்தை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு சரக்கு ரயில்களை நிறுத்தி வைப்பதால் பாதிக்கப்படுவது பஞ்சாப் மாநிலம் மட்டுமல்ல, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களும்தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மீண்டும் ரயில்போக்குவரத்தைத் தொடங்கி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும்படி செய்யவேண்டும் என கேட்டுக்கொள்வதோடு இன்னும் ஒரு போராட்டத்திற்கு வழிவகுக்க வேண்டாமெனவும் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லோக் இன்சாஃப் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சிம்ரான்ஜித் சிங் பெய்ன்ஸ், பஞ்சாபி ஏக்தா கட்சி எம்.எல்.ஏக்கள் சுக்பால் கைரா மற்றும் ஷிரோமணி அகாலிதளம் (ஜனநாயக) எம்.எல்.ஏ பர்மிந்தர் சிங் திண்ட்சா ஆகியோரும் கலந்து கொண்டனர்.