இந்தியா

பிஹாரில் 2-ம் கட்ட தேர்தல்: நக்ஸல்கள் ஆதிக்க பகுதிகளில் உச்சகட்ட பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த 6 மாவட்டங்களில் உள்ள 32 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்த வருகிறது.

பிஹார் சட்டப்பேரவைக்கு 5 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியும் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகளை தவிர பிஹாரின் தற்காலிக முதல்வராக இருந்த ஜித்தன் ராம் மாஞ்சி தொடங்கிய இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது.

முதல் கட்ட தேர்தல் 49 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி நடந்தது. அப்போது 57 சதவீத வாக்குகள் பதிவாகின. 2-ம் கட்ட வாக்குப் பதிவு ஜெகனாபாத், அர்வால், கயா, ரோடாஸ், கைமூர், அவுரங்காபாத் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 32 தொகுதிகளில் நடக்கிறது.

நக்ஸல்கள் மிரட்டல் உள்ள தொகுதிகளில் மட்டும் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் பிற்பகல் 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

SCROLL FOR NEXT