உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், அங்கு நேற்று 2 முஸ்லிம் பெண்களுக்கு நடைபெற்ற திருமணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை இந்துக்கள் செய்து கொடுத்தனர்.
தாத்ரியை அடுத்த பிசோதா கிராமத்தைச் சேர்ந்த முகமது இக்லாக் குடும்பத்தினர் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் குடும்பத்தினர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இதில் இக்லாக் பலியானார். அவரது 22 வயது மகன் தானிஷ் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
பிசோதா கிராமத்தைச் சேர்ந்த ஹக்கீம், தனது 2 மகள்களுக்கு இதே கிராமத்தில் நேற்று திருமணம் செய்து வைக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். இதனிடையே, இக்லாக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவியதையடுத்து வேறு ஊரில் திருமணத்தை நடத்துவது குறித்து ஹக்கீம் குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்பு பரிசீலித்து வந்தனர். ஆனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடத்தை மாற்ற வேண்டாம் என சமாதானம் செய்தனர்.
மேலும் உணவு, பந்தல் உட்பட திருமணத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக சில இந்துக்கள் தெரிவித்தனர். ஆனால் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தனர். இதை ஹக்கீம் ஏற்றுக்கொண்டார். இதன்படி ஹக்கீமின் மகள்களான ஜெய்தூன் மற்றும் ரேஷ்மா ஆகியோருக்கு முறையே நசீம் மற்றும் மொபின் ஆகியோருடன் திருமணம் அமைதியான முறையில் நடைபெற்றது.
இதுகுறித்து ஹக்கீம் கூறும் போது, “எங்கள் கிராமம் பெரிய குடும்பம் போன்றது. எங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள் வது வழக்கம். இந்துக்கள் எனக்கு பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உதவி செய்து வருகின் றனர். அதுபோல் என்னுடை மகள் களின் திருமணத்தையும் தங்கள் சொந்த மகள்களின் திருமணமாகக் கருதி நடத்தி வைத்தார்கள்” என்றார்.
“முஸ்லிம் குடும்பத்தினருக்கு இந்துக்கள் உதவி செய்திருப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் முஸ்லிம் குடும்பத்தினரின் திருமணத்துக்கு இந்துக்கள் உதவி செய்துள்ளனர். மசூதி கட்டுவதற்கும் இந்துக்கள் நிதி திரட்டி வழங்கி உள்ளனர். ஹக்கீம் மகள்களின் திருமணத்துக்குப் பிறகு அமைதியும் மத நல்லிணக்கமும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்” என சஞ்சய் ராணா என்பவர் தெரிவித்தார்.
தாத்ரி துணை ஆட்சியர் ராஜேஷ் சிங் கூறும்போது, “முதியவர் படுகொலை சம்பவத்துக்குப் பிறகு மணமக்கள் குடும்பத்தினர் பிசோதா கிராமத்துக்கு வர மறுத்தனர். இதனால் திருமண இடத்தை மாற்றக் கோரினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்தோம். இப்போது கிராமத்தில் அமைதி நிலவுகிறது” என்றார்.
இதனிடையே நொய்டாவின் கைலாஷ் மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தானிஷ் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு மாற் றப்பட்டார். தானிஷுக்கு நினைவு திரும்பிவிட்டதாகவும் அவர் குண மடைந்து வருவதாகவும் கைலாஷ் மருத்துவமனை மருத்துவர் அனில் குர்னானி தெரிவித்தார்.