சஹார்ஸாவில் இன்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி : படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

பிஹாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ஸ்ரீராம்’ உச்சரித்தவர்களுக்குத் தொந்தரவு கொடுத்தார்கள்: பிரதமர் மோடி பேச்சு

பிடிஐ

பிஹாரில் 15 ஆண்டுகள் காட்டாட்சி நடத்தியவர்கள் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே கூறியவர்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்தனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்குக் கடந்த மாதம் 28-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 2-வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 3-வது கட்ட வாக்குப்பதிவு 7-ம் தேதியும், 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

இந்நிலையில் வடக்கு பிஹாரின் அராரியா மாவட்டத்தில் உள்ள சஹார்சாவில் பிரதமர் மோடி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஆட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள் என்பது தவறு. கடந்த 10 ஆண்டுகளின் மக்களின் தேவைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறைவேற்றியுள்ளது. அவர்களின் நலனில் அக்கறையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு இளவரசர்களையும் (ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்) மக்கள் நிராகரிப்பார்கள்.

பிஹாரில் ரவுடிகள், மிரட்டிப் பணம் பறிப்பவர்கள் காணாமல் போய்விட்டார்கள். சட்டத்தின் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது. குடும்ப ஆட்சி முறை ஜனநாயகத்தின் முன் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

காட்டாட்சியின்போது ஏழை மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைக் கூட இழந்தனர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வந்தபின்புதான் விளிம்புநிலை மக்களுக்கு அந்த உரிமைகள் கிடைத்தன.

15 ஆண்டுகளாக மாநிலத்தைக் காட்டாட்சி செய்த குடும்பத்தினர், ஜெய் ஸ்ரீராம் சொல்பவர்களுக்கும், பாரத் மாதா கி ஜே சொல்பவர்களுக்கும் தொந்தரவுகள் விளைவித்தனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த பாதுகாப்பின்மை, குடும்ப ஆட்சி ஆகியவை நிதிஷ் குமார் ஆட்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

நிதிஷ் குமார் ஆட்சியில் இரவு நேரத்தில் கூட மக்கள் அச்சமின்றி சாலையில் நடக்கிறார்கள். பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கி சாதித்துள்ளோம். அடுத்ததாக, பைப் மூலம் கேஸ் விநியோகம் செய்யப் போகிறோம். இந்த 10 ஆண்டுகள் காலத்தில் சாலைகள், விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே இருப்பவை தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.


ஆனால், எதிர்க்கட்சியினர் எப்போதும் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். வறுமையை ஒழித்துவிடுவோம், வேளாண் கடன் தள்ளுபடி, ஒரு பதவி ஒரு பென்ஷன் எனப் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.

இந்தப் பொய்யான வாக்குறுதியால்தான் ஒரு கட்சி தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 100 எம்.பி.க்களுக்கும் குறைவாக இருக்கிறது. பிஹார், உ.பி. போன்ற மாநிலங்களில் 3-வது, 4-வது, 5-வது இடத்துக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டுள்ளது''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT