பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தாம் பிரச்சாரம் செய்யப் போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருந்தார். ஆனால், அவர் கூறியது போல் பிரச்சாரம் செய்யாமல் இதுவரையும் விலகி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
கரோனா பரவலால் மத்திய உள் அமைச்சரான அமித்ஷாவும் பாதிக்கப்பட்டிருந்தார். டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவருக்கு கரோனா விலகி குணமடைந்தார்.
இது குறித்து அவர் ஒரு இந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘நான் அக்டோபர் 25 இல் பிஹார் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். இப்போது கரோனா குணமடைந்து பூரண நலம் பெற்றுள்ளேன்.’ எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், அமித்ஷா இதுவரை பிஹார் செல்லவில்லை. வரும் 7 ஆம் தேதி நடைபெறும் கடைசிகட்ட தேர்தலின் பிரச்சாரத்திற்கும் அவர் செல்ல மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அரசியலில் நுழைந்த போது பாஜகவின் தலைவராக இருந்த அமித்ஷா, மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் தீவிரம் காட்டி வந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையான கூட்டமும் அமித்ஷாவிற்கு இருந்தது.
கடந்த 2015 பிஹார் தேர்தலில் அமித்ஷா தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். அப்போது லாலுவுடன் இணைந்திருந்த நிதிஷின் மெகா கூட்டணி வென்றால், பாகிஸ்தானில் பட்டாசுகள் வெடிப்பதை விரும்புகிறார்களா? எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.
அமித்ஷாவிடம் இருந்து கட்சியின் தலைவர் பதவியை கடந்த ஜனவரியில் ஜே.பி.நட்டா பெற்றிருந்தார். இதையடுத்துவந்த டெல்லி தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.
அடுத்து வந்த ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக தனது ஆட்சியை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியிடம் பறி கொடுத்தது. எனவே, முக்கிய தலைவரான அமித்ஷாவின் வரவை நம்பி பிஹார் பாஜகவினரும் ஏமாந்து புலம்பத் துவங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இதனால், பிஹார் தேர்தலில் மட்டும் அமைச்சர் அமித்ஷா விலகியிருப்பது டெல்லியில் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இதை சமாளிக்க கடைசி நேரத்திலாவது அமைச்சர் பிரச்சாரம் செய்வார் என பிஹார் பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.