மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மரணம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்த சிராக் பாஸ்வான் வெளியேறி தனித்து போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து ஐக்கிய ஜனதாதளக் கட்சியை விமர்சித்து வருகிறார்.
நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராகச் செயல்பட்டு அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தும் லோக் ஜனசக்தி கட்சி, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் பேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இருப்பினும் லோக் ஜனசக்தி கட்சி பிரதமர் மோடியின் பெயரையோ, படத்தையோ பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று பாஜக உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் மீதும், பாஜக மீதும் மதிப்பு வைத்துள்ள, லோக் ஜனசக்தி கட்சி்யின் தலைவர் சிராக் பாஸ்வான், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.
இதனால் ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவர்களும் அவர்களது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் சிராக் பாஸ்வானை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர் மாஞ்சியின்
இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் சிராக் பாஸ்வானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இந்தநிலையில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில் ‘‘ராம் விலாஸ் பாஸ்வானின் மரணம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும். அவரது மகனும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தொடர்ந்து ராம் விலாஸ் பாஸ்வான் மரணம் குறித்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.