நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் தாயாருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் அல்தாஃப் ஷேக் அவுராங்கபாத்தின் ஒரு பன்முகச் சிறப்பு மருத்துவமனையுடன் தொடர்புடையவர். அண்மையில் இவரது உணர்வுபூர்வமான மருத்துவப் பணி பல்வேறு தரப்பினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நேரத்தில், மூதாட்டியை ஆறுதல்படுத்தும் மருத்துவர் அல்தாஃப் ஷேக்கின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது.
மகாராஷ்டிரப் பொதுப்பணித்துறை அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், வீடியோவைப் பார்த்துவிட்டு உடனே மருத்துவரை அழைத்து, அவரது உள்ளார்ந்த கருணை உணர்வைப் பாராட்டினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் வீடியோவை வெளியிட்டு அமைச்சர் அசோக் சவான் கூறியுள்ளதாவது:
"அவுரங்காபாத்தைச் சேர்ந்த டாக்டர் அல்தாஃப் ஷேக் ஒரு வயதான பெண்மணிக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் ஒரு தியாகியின் தாய் என்பதை அவர் புரிந்துகொண்டதால், தனக்குக் கிடைக்க வேண்டிய கட்டணத்தை மருத்துவர் தள்ளுபடி செய்துவிட்டார். அவரது கருணை மிக்க செயல் என்னை ஈர்த்தது.
நம் தேசத்திற்குச் சேவை செய்த ஹீரோக்களுக்கு அவர் செய்த சேவை மற்றும் உணர்வுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது நமது கடமை என உணர்ந்தேன். இதற்காக நான் தனிப்பட்ட முறையில் மருத்துவரை அழைத்துப் பாராட்டினேன்''.
இவ்வாறு அமைச்சர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் ஷேக், பிடிஐயிடம் கூறுகையில், ''அந்தப் பெண்மணியின் பெயர் சாந்தபாய் சூரத். மிகவும் ஏழ்மையானவர். சிறுநீரகம் தொடர்பான நோய் காரணமாக வலியால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை மூலம் அவரது நோய்க்குத் தீர்வு காணமுடியும் என நாங்கள் முடிவெடுத்தோம். அதேநேரம் அவரது அவசர அறுவை சிகிச்சைக்குக் கணிசமான தொகை தேவைப்பட்டது.
அவரது மகன்களில் ஒருவர் சமீபத்தில் மாரடைப்பால் இறந்துவிட்டார். மற்றொரு மகனோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாராவில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு நாட்டுக்காக தனது உயிரையே அர்ப்பணித்தவர்.
எல்லைச் சண்டையில் உயிரிழந்த மகனின் ஓய்வூதியம் அவரது விதவை மனைவிக்குச் செல்கிறது. மற்றபடி தாயார் சாந்தபாய்க்குச் சொல்லும்படியாக வருமானம் இல்லை.
இந்நிலையில்தான் தியாகியின் தாயாருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முடியுமா என்று நான் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினேன். அவர்களும் சம்மதித்தனர். அவர் அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பும் நேரத்தில், அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். நாங்கள் அனைவரும் அழுதுவிட்டோம்"
இவ்வாறு மருத்துவர் அல்தாஃப் ஷேக் தெரிவித்தார்.
நாட்டுக்காக உயிர் துறந்த ராணுவ வீரரின் தாயாருக்கு இலவச சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரின் செயலுக்காக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.