இந்தியா

தாத்ரி படுகொலை சம்பவம்: மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

மாட்டிறைச்சி தொடர்பான தாத்ரி படுகொலை பற்றி கடைசியாக பிரதமர் மோடி மவுனம் கலைத்தார். "குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காட்டிய பாதையை நாம் பின்பற்ற வேண்டும்" அவர் கூறினார்.

பிஹாரில் நவாதா தேர்தல் பிரச்சாரத்தின் போது தாத்ரி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “வெறுப்பு வளர்க்கும் பேச்சுகளை காது கொடுத்துக் கேட்க வேண்டாம் என்று ஒவ்வொருவரிடமும் நான் முறையிடுகிறேன்.

நாடு ஒற்றுமையுடன் விளங்க வேண்டும். ஒற்றுமையும் சகதோரத்துவமுமே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். வறுமையை ஒழிக்க இந்து, முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அவர் கூறியது போல் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த நாகரிக மதிப்பீடுகளான பண்பாட்டு பன்முகத்தன்மை, சகிப்புத் தன்மை ஆகியவற்றை காப்பாற்ற பாடுபடவேண்டும்” என்றார் மோடி.

முன்னதாக புதன்கிழமையன்று பிரணாப் முகர்ஜி தாத்ரி சம்பவம் பற்றி கூறும்போது, "நமது கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடுகள் தான் பல நூற்றாண்டுகளாக நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது. பல்வேறு பழங்கால நாகரிகங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள், நீண்டகால ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகும் இந்திய நாகரிகம் நிலைத்திருப் பதற்கு இந்த அடிப்படை கோட்பாடுகளே காரணம்.

இந்தக் கோட்பாடுகளை நாம் மனதில் கொண்டால் நமது நாட்டின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.

நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சிக்கு எல்லை இல்லை. இன்னும் நாம் வளர்ச்சி அடைய வேண்டும். நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு நான் பங்காற்றியுள்ளேன். இதை எனது வழியில் செய்துள்ளேன். நான் இப்பதவிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆனாலும், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டிய இப்பதவியில் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறேன்" என்றார்.

இந்தக் கருத்துக்களை பின்பற்றுமாறு இன்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியது. இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தாத்ரியில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி போலீஸார் குவிக்கப்பட்டனர். உ.பி. மாநில முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இக்லாக் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிவந்தனர். இந்தச் சம்பவம் நாடு தழுவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை முன்வைத்து நாட்டின் சமூக நல்லிணக்கம் தொடர்பாக பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருவது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT