உச்ச நீதிமன்றம் : கோப்புப்படம் 
இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்குப் பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பிடிஐ

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிப்பதால், நீதிபதிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு வழங்கினார். அதில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தார்.

இந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டபின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது, அவரும் ஓய்வு பெற்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பதால், தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்தக் கடிதம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்எப் நாரிமன் தலைமையில் நீதிபதிகள் நவின் சின்ஹா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் வேண்டுகோளின்படி அவருக்கான பாதுகாப்பை நீட்டிக்க முடியாது. அவரின் கடிதத்தைப் பரிசீலிக்க இயலாது” எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT