பெங்களூரு-மைசூரு இடையே யான ரயில் பாதை தரமாக அமைக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு-மைசூரு இடையே ரூ.40 கோடி செலவில் 130 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது பாதியளவு நிறைவு பெற்றுள்ளன. பணிகள் முடிந்த பகுதியில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பதிவில், "பெங்களூரு-மைசூரு இடையே பணிகள் முடிந்த இரட்டை ரயில் பாதையில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு ரயில் பெட்டியில் ஒரு டம்ளரில் தண்ணீர் வைக் கப்பட்டு இருந்தது. ரயில் அதிவேகமாக இயக்கப்பட்ட போதிலும் அந்த டம்ளரில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை. இதன்மூலம் அந்த இரட்டை ரயில் பாதை எவ்வளவு தரமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இந்த ரயில் பாதையில் பயணம் அருமையாக இருந்தது" என பதிவிட்டுள்ளார்.
மேலும் ரயில் என்ஜின் இயக் கப்பட்டபோது டம்ளரில் இருந்த தண்ணீர் சிந்தாமல் இருந்த வீடியோவையும், பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதி வேற்றம் செய்துள்ளார். இது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.