இந்தியா

மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: மத்திய அமைச்சரவையில் பங்கேற்க முடிவு

செய்திப்பிரிவு

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஆலோசித்தார்.

நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி குஜராத் பவனில் தங்கியுள்ளார். அவரை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், சீமாந்திரா முதல்வராக பொறுப்பேற்க உள்ளவருமான சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இருவரும் 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பு முடிந்து வெளியில் வந்த சந்திரபாபு நாயுடு கூறும்போது, ‘‘காங்கிரஸ் அல்லாத நான்கு மத்திய அரசுகளில் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்துள்ளது. அதன்படி, தற்போது அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலும் பங்கு வகிப்போம்’’ என்றார். முன்னதாக சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

ஆந்திராவில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி மத்திய அமைச்சரவையில் 4 அமைச்சர் பதவிகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கேபினட் அமைச்சர், ஒரு தனிப்பொறுப்பு, ஒரு இணை அமைச்சர் என மூன்று அமைச்சர் பதவிகள் அக்கட்சிக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விஜயநகரம் தொகுதி எம்பி அசோக் கஜபதி ராஜு பசுபதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT