கோப்புப் படம் 
இந்தியா

பிஹாரில் நவம்பர் 3-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல்: 94 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது

செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவைக்கு 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் 94 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகாபந்தன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

முதல்கட்டத் தேர்தல் கடந்த 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. பிஹார் சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 53.54% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அடுத்த இரு கட்டங்கள் நவம்பர் 3, 7-ம் தேதிகளில் நடக்கிறது, 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 அன்று நடைபெறும் 2-ம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 1463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கடைசி நாளான இன்று அரசியல் கட்சிகள் மும்முரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பிஹாரில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று சாப்ரா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

பிரதமர் மோடியுடன் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் உடனிருந்தார். கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதுபோலவே ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

SCROLL FOR NEXT