காஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் வீடுகளை துப்பாக்கித் தோட்டாக்களால் தாக்கி பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லை (ஐபி) மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றில் பல்வேறு செக்டர் பகுதிகளிலும் தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு மற்றும் மோட்டார் ஷெல் தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால் எல்லைப் பகுதி அருகே இருந்த ஒரு கோயில் மற்றும் சில வீடுகள் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) இதற்குப் பதிலடி கொடுத்ததுடன், இந்திய தரப்பில் உயிர் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் எதுவுமில்லை.
கத்துவா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகேயுள்ள ஹிராநகர் செக்டரின் மன்யாரி, சாண்ட்வா மற்றும் லோண்டி கிராமங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லார்ட் சிவன் கோயில் மற்றும் வீடுகளுக்கு சிறிய சேதம் ஏற்பட்டது.
புல்லட் பாய்ந்ததில் ஒரு ஜோடி மாடுகள் படுகாயமடைந்தன. பின்னர் கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு அவை காப்பாற்றப்பட்டன.
எல்லையைத் தாண்டி சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் இந்தச் துப்பாக்கிச் சூடு தொடங்கியது, இரு தரப்பினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.25 மணி வரை கடும் சண்டை தொடர்ந்தது. பொதுமக்கள் வாழ்விடங்கள் அருகிலேயே இச்சண்டைகள் நடைபெற்றதால் நிலத்தடி பதுங்கு குழிகளில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் எல்லைவாசிகளுக்கு ஏற்பட்டது. இதனால் எல்லைவாசிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.