உத்தரப்பிரதேசத்தில் எங்கள் சகோதரிகளுடன் வாழ்க்கையில் விளையாடுபவர்களுக்கு எதிராகவும், லவ் ஜிகாத்தைத் தடுக்கவும் கடும் சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ அருகே ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ மாநிலத்தில் இந்துப் பெண்களைப் பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும்.
எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும், பெருமையையும், மாண்பையும் குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அவ்வாறு தொடர்ந்து எங்கள் சகோதரிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியது இருக்கும்.
சமீபத்தில் அலகாபாத் நீதிமன்றம் ஓர் வழக்கில் தீர்ப்பளித்தது. மதம்மாறி திருமணம் செய்த ஜோடி போலீஸ் பாதுகாப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். திருமணமான பெண் பிறப்பால் முஸ்லிம், திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் இந்து மதத்துக்குமாறியுள்ளார். திருமணம் செய்வதற்காக மதம்மாற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்ததை இங்கு கூறுகிறேன். மாநிலத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் கடுமையாக சட்டம் கொண்டுவரப்படும். ”எனத் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டாலும் அது கடந்த வாரம்தான் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த வழக்கில் பிறப்பில் முஸ்லிமாக இருந்த ஒரு பெண் மதம் மாறி இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். கடந்த ஜூன் 29-ம் தேதி இந்து மதத்துக்கு மாறிய எந்த பெண், ஜூலை 31-ம் தேதி திருமணம் செய்துள்ளார். தங்களுக்கு பாதுகாப்பு தேவை எனக்கோரி இருவரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, “ திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் மணப்பெண் இந்து மதத்துக்கு மாறியுள்ளார், அதன்பின் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் நூர்ஜஹான் எனும் அஞ்சலி மிஸ்ரா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் மேற்கோள்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.