இந்தியா

‘ஆரோக்கிய சேது’ செயலி பற்றி பதில் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலை கண்காணிக்க 'ஆரோக்கிய சேது' செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்தச் செயலியை உருவாக்கியது யார் என்ற ஆர்டிஐ கேள்விக்கு தங்களிடம் தகவல் இல்லை என தேசிய தகவல் மையம் (என்ஐசி) அண்மையில் கூறியது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு என்ஐசி-க்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தொழில் மற்றும் கல்வித் துறை நிபுணர்களுடன் இணைந்து மிகவும் வெளிப்படையான முறையில் ஆரோக்கிய சேது செயலியை என்ஐசி உருவாக்கியது. இந்த செயலி குறித்தோ அல்லது கரோனா பரவல் கட்டுப்பாட்டில் இதன் பங்கு குறித்தோ எவ்வித சந்தேகமும் வேண்டாம்” என விளக்கம் அளித்தது.

இந்த செயலி குறித்து அதிகாரிகள் பதில் அளிக்காத விவகாரத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இத்தகைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி என்ஐசி மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

"ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் விண்ணப்பதாரருக்கு வழங்க அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுகளுக்கு இணங்க அமைச்சகம் நடந்துகொள்ளும்" எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT