கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம் 
இந்தியா

நாட்டிலேயே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மாநிலங்களில் கேரளாவுக்கு முதலிடம்; கடைசி இடத்தில் உத்தரப் பிரதேசம்: பிஏசி அமைப்பு அறிக்கை

பிடிஐ

நாட்டிலேயே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மாநிலங்களில் கேரளா முதலிடம் வகிக்கிறது. கடைசி இடத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் இருக்கிறது என்று 2020 ஆம் ஆண்டுக்கான பொது விவகாரங்கள் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான பொது விவகாரங்கள் குறியீட்டைப் பொது விவகாரங்கள் மையம் இன்று வெளியிட்டுள்ளது. பொது விவகாரங்கள் மையம் (பிஏசி) என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைவராக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் செயல்பட்டு வருகிறார்.

நாட்டில் உள்ள மாநிலங்களின் நிலையான வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறனை அடிப்படையாக வைத்து தர வரிசை வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் என்பது தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்

இதற்கான ஆண்டு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் இன்று வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

''தென் மாநிலங்களான கேரளா (1.388 புள்ளிகள்), தமிழகம் (0.912), ஆந்திரா (0.531), கர்நாடகா (0.468) ஆகியவை முதல் 4 இடங்களைச் சிறந்த நிர்வாகத்தின் அடிப்படையில் பிடித்துள்ளன.

உத்தரப் பிரதேசம் (-1.461), ஒடிசா (-1.201), பிஹார் (-1.158) ஆகிய மாநிலங்கள் நிர்வாக ரீதியில் கடைசி 3 இடங்களைப் பிடித்துள்ளன.

சிறிய மாநிலங்களுக்கான பிரிவில் கோவா (1.745) முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மேகாலயா (0.797), இமாச்சலப் பிரதேசம் (0.725) ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.

மோசமான நிர்வாகத்தின் அடிப்படையில் மணிப்பூர் (-0.363), டெல்லி (0.289), உத்தரகாண்ட் (0.277) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

யூனியன் பிரதேசங்களில் சிறந்த நிர்வாகத்தை வெளிப்படுத்திய மாநிலங்களில் சண்டிகர் 1.05 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி (0.52), லட்சத்தீவுகள் (0.003) ஆகியவை உள்ளன.

மோசமான நிர்வாகத்தில் தாதர் நாகர் ஹாவேலி, அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு காஷ்மீர் ஆகியவை இடம் பெற்றுள்ளன''.

இவ்வாறு ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT