இந்தியா

கேசுபாய் படேல் மறைவு: காந்திநகர் சென்று பிரதமர் மோடி அஞ்சலி

செய்திப்பிரிவு

குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் நேற்று காலமான நிலையில் காந்திநகரில் உள்ள அவரது வீட்டிற்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பாஜக மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான கேசுபாய் படேல் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

கடந்த சில ஆண்டுகளாகவே, நீண்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேசுபாய் படேல் கரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இருப்பினும் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் கரோனா தொற்றிலிருந்து மீண்டார்.

திடீரென கேசுபாய் படேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அகமதாபாத்தில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “நம்முடைய அன்புக்குரிய, மதிப்புக்குரிய தலைவர் கேசுபாய் படேல் காலமாகிவிட்டார். அவரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையும், வருத்தமும் அடைகிறேன். சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரின் முன்னேற்றத்துக்கும் பங்காற்றிய சிறந்த தலைவர். குஜராத் மாநில முன்னேற்றத்துக்கும், மக்கள் நல்வாழ்வுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர்” எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் இன்று குஜராத் வந்த பிரதமர் மோடி காந்திநகரில் உள்ள கேசுபாய் படேலின் வீட்டிற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த கேசுபாய் படேல் திருவுருவப் படத்திற்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கேசுபாய் படலின் மகன் உள்ளிட்ட உறவினர்களிடம் துக்கம் விசாரித்தார்.

SCROLL FOR NEXT