பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

காஷ்மீரில் பாஜக தொண்டர்கள் மூன்று பேர் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்: துணை நிலை ஆளுநர் கடும் கண்டனம்

ஏஎன்ஐ

காஷ்மீரில் பாஜக தொண்டர்கள் மூன்று பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு துணை நிலை ஆளுநர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரைச் சேர்ந்த குல்காம் மாவட்டத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. ஒய்.கே.போரா என்ற இடத்தில் வியாழக்கிழமை இரவு மூன்று பாஜக தொண்டர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குண்டுபாய்ந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிடா உசேன் யாடூ, உமர் ரஷீத் பீ மற்றும் உமர் ரம்ஜான் ஹஜாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் காசிகுண்ட் பகுதியில் தீவிரவாதிகளால் அரசியல் தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன்.அதேவேளை இந்தக் கொலைகள் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மனிதகுலத்தின் எதிரிகள் என்றும் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களை நியாயப்படுத்த முடியாது. சட்டம் தனது கடமையை செய்யும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

உயிரிழந்த ஆத்மாக்கள் நித்திய அமைதி பெற பிரார்த்தனை செய்கிறேன். துயரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், அக்குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் அனைத்து உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பாஜக செய்தித் தொடர்பாளர் கண்டனம்

பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதை ஜம்மு-காஷ்மீரின் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர் கடுமையாக கண்டித்ததோடு, இந்த நடவடிக்கை மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்று குறிப்பிட்டார்.

மிலாடி நபி புனித தினம் கொண்டாடப்படும் வேளையில் நிராயுதபாணியான மக்களைக் கூட பயங்கரவாதிகள் விட்டுவைக்கவில்லை. கொலையாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தாக்கூர் காவல்துறையினரை வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT