இந்தியா

சஹாரா அதிபர் சுப்ரதா ராயை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: உத்தரவுகளை தொடர்ந்து மீறி வருவதற்கு கண்டனம்

செய்திப்பிரிவு

சஹாரா அதிபர் சுப்ரதா ராயை சிறையில் இருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சஹாரா குழுமம் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறி வருவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தரும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் சஹாரா குழும அதிபர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் அவர் திஹார் சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு ஜாமீன் வழங்க ரூ.10,000 கோடியை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரும் திட்டத்தை சஹாரா குழுமம் தாக்கல் செய்திருந்தது. மேலும், அவரை உச்ச நீதிமன்றம் நேரடியாக சிறையில் அடைத்ததை கேள்வி எழுப்பியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜகதீஷ் சிங் கேஹர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பு விவரம்:

முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தருவது குறித்து “செபி” நிறுவனம் பிறப்பித்த உத்தரவை சஹாரா குழுமம் மதிக்கவில்லை. மேல் முறையீட்டு தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று எந்த உத்தரவையும் மதிக்கவில்லை. 2011 முதல் 2014 வரை 81 முறை வாய்தா வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப் பதை ஏற்க முடியாது. அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு உண்டு. அவரை சிறைக்கு அனுப்பியதில் தவறில்லை.

நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவது நாட்டுக்கு ஏற்படும் நேரடி இழப்பு. இது போன்ற தேவையற்ற மனுக்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றன. அதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் தேவையற்ற வழக்குகளை தடுக்க சட்டம் கொண்டு வருவது அவசியம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT