உலகப் புகழ்பெற்ற பனாரஸ் பட்டுப்புடவை நெய்யும் குடும்பங்களை அவலநிலையிலிருந்து மீட்டெடுங்கள் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று கடிதம் எழுதியுள்ளார்.
பிரியங்கா காந்தி, கடந்த திங்களன்று வாரணாசியைச் சேர்ந்த சுமார் 40 முதல் 50 நெசவாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். மேலும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். அப்போது மின் கட்டண உயர்வு காரணமாக எழும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றின் இணைப்புகள் எவ்வாறு துண்டிக்கப்படுகின்றன என்பதையும் நெசவாளர்கள் பிரியங்காவிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரியங்கா காந்தி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
''வாரணாசியின் நெசவாளர்கள் சில காலமாகவே மிகவும் கவலையுடனும், அவநம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பது எனது கவனத்திற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் குடும்பங்கள் உலகப் புகழ்பெற்ற பனாரஸ் பட்டுப் புடவைகளை நெய்பவர்கள். ஆனால், அவர்கள் இன்று தங்கள் அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்பட்டுக் கொண்டுள்ளனர்.
வாரணாசி நெசவாளர்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவற்றில் முக்கியமானது அவர்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் தொடர்பானது. அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மின்சாரம் வழங்கும திட்டத்தை ஒரே அளவான கட்டண விகிதத்தில் மீட்டெடுக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று மற்றும் அரசாங்கக் கொள்கைகள் காரணமாக உத்தரப் பிரதேசத்தின் பெயரைப் பல ஆண்டுகளாக தங்கள் கைவினைத் தயாரிப்புகளால் பிரபலமாக்கியுள்ள இந்த நெசவாளர்களின் முழு வணிகமும் தற்போது அழிக்கப்பட்டுவிட்டன.
இந்தக் கடினமான காலகட்டத்தில் உத்தரப் பிரதேச அரசு அவர்களுக்கு உதவ வேண்டும்.
காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 2006 ஆம் ஆண்டில் நெசவாளர்களுக்கு, வித்தியாசமின்றி ஒரே அளவிலான கட்டணத்தில் (flat rate) மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், தங்கள் அரசு அந்தத் திட்டத்தை நிறுத்துவதன் மூலம் நெசவாளர்களுக்கு அநீதி இழைத்துள்ளது.
தங்கள் அரசாங்கம் தன்னிச்சையான மின் மசோதாக்களை நிறைவேற்றியது. அதனை எதிர்த்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது தங்கள் அரசு நிர்வாகம் அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததுள்ளனர். ஆனால், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று நெசவாளர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
இக்கடிதத்தில் மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். நெசவாளர்கள் முன்பே பெற்றுவந்த ஒரே அளவிலான கட்டண விகிதத்தில் மின்சாரம் வழங்கும் திட்டம் மீட்டெடுக்கப்பட வேண்டும். நிலுவையில் உள்ள போலி பில்கள் என்ற பெயரில் அவர்கள் துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் அவர்களின் மின்சார இணைப்புகளைத் துண்டிக்கக் கூடாது. ஏற்கெனவே துண்டிக்கப்பட்ட இணைப்புகள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை தாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்''.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.