சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சீனாவின் உதவியுடன் காஷ்மீரில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த விரும்புவதாக மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா ஆகியோர் கூறுவது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு அவர்கள் முயற்சித்தால் அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்க முயற்சித்தால் அது தேசத்துரோகம் ஆகும்.
நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் சிவசேனாவின் கொள்கை. நாங்கள் முன்பே கூறியது போல, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அத்தகைய முடிவுகள் எதையும் எடுத்தால் நாங்கள் எங்கள் முடிவை அப்போது எடுப்போம். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.