வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 16 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன. இதனால் விமானப் படையின் பலம் உச்சம் அடையும்.
இந்திய விமானப் படையை பலப்படுத்தும் வகையில் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு கடந்த 2016 செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 விமானங்கள் அபுதாபி வழியாக கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. ஹரியாணா மாநிலம், அம்பாலா விமானப் படையின் தங்க அம்புகள் படைப்பிரிவில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து 2-ம் கட்டமாக 3 ரஃபேல் விமானங்கள் வரும் நவம்பர் 5-ம் தேதி நேரடியாக அம்பாலா வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட 7 ரஃபேல் விமானங்களை பயன்படுத்தி, பிரான்ஸில் இருந்தே இந்திய விமானப் படை விமானிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், வரும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா 3 விமானங்களும் ஏப்ரல் மாதத்தில் 7 விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதனால் இந்திய விமானப் படையில் ரஃபேல் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக உயரும். இதில் 21 போர் விமானங்கள் ஆகவும் 7 பயிற்சி விமானங்கள் ஆகவும் இருக்கும்.
அம்பாலாவில் உள்ள தங்க அம்புகள் படைப் பிரிவு 18 விமானங்களுடன் வரும் ஏப்ரலில் முழுமை பெற்று விடும். எனவே எஞ்சிய 3 விமானங்கள் வடக்கு வங்காளத்தில் உள்ள ஹஷிர்மாரா விமானப் படை தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் கிழக்குப் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ள முடியும். அனைத்து ரஃபேல் விமானங்களிலும் வானிலிருந்து வான் இலக்கையும் வானில் இருந்து தரை இலக்கையும் தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் வரும் ஏப்ரலில் இந்திய விமானப் படையின் தாக்குதல் திறன் உச்ச கட்டத்தை அடையும்.
இதனிடையே இந்தியாவுக்கு மேலும் ரஃபேல் விமானங்கள் வழங்க பிரான்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டின் மிகப்பெரிய ஜெட் இன்ஜின் உற்பத்தி நிறுவனமான சஃப்ரான், இந்தியாவில் ஜெட் விமான இன்ஜின் மற்றும் பிற பாகங்கள் தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாளில் இருந்து 4 ஆண்டுகளில் இந்தியாவில் இவை தயாரிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இது மிகவும் வரவேற்புக்குரியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.