இந்தியா

சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் வி.கே.சிங்குக்கு ராஜ்நாத் கண்டிப்பு

பிடிஐ

முக்கிய விவகாரங்களில் கருத்து தெரிவிக்கும்போது, அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று வி.கே.சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்களை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாம் கூறிய கருத்துகள் திரித்துக் கூறப்பட்டது என்றும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் சொல்லிக் கடந்துவிட முடியாது. நம் கருத்துகளைத் தெரிவிக்கும்போது, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

ஆளும் கட்சியின் தலைவர்கள் எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தும்போது, அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்" என்றார் ராஜ்நாத் சிங்.

வி.கே.சிங் சர்ச்சைப் பேச்சு

"யாராவது நாய் மீது கல்லெறிந்தால், அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது" என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. இதன் எதிரொலியாகவே ராஜ்நாத் சிங் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வி.கே.சிங். இவர் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருக்கிறார். ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் தலித் குடும்பத்தினர் கடந்த 19-ம் தேதி நள்ளிரவு எரிக்கப்பட்டனர். அதில் 2 குழந்தைகள் கருகி இறந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் வி.கே.சிங் நேற்று கூறும்போது, "யாராவது நாய் மீது கல்லெறிந்தால், அதற்கு மத்திய அரசு பொறுப்பாகாது. நாயை பாதுகாக்க தவறி விட்டது என்று மத்திய அரசு மீது குற்றம் சொல்ல முடியாது. பரிதாபாத்தில் நடந்த சம்பவம் உள்ளூர் சம்பந்தப்பட்டது. அவர்கள் குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை. இதில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தாமல் உள்ளூர் நிர்வாகம் என்ன செய்து கொண் டிருந்தது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவதை நிறுத்த வேண்டும்" என்றார் வி.கே.சிங்.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் கூறுகையில், "அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. தலித்துகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களையும் சிங் அவமானப்படுத்தி இருக்கிறார். மோடி அரசின் மனப்பான்மைதான் அமைச்சரின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து அவரை மோடி உடனடியாக நீக்க வேண்டும்" என்றார்.

மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், "அமைச்சரின் பேச்சு சாதி வெறியை காட்டுகிறது. அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்றார்.

வி.கே.சிங் மறுப்பு

தனது பேச்சால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், "பரிதாபாத் சம்பவத்தையும் நாய் மீது கல்லெறிதலையும் நான் ஒப்பிட்டு சொல்லவில்லை" என்று வி.கே.சிங் மறுப்பு தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வட இந்தியர்கள் குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT