இந்தியா

உ.பி.யில் தாடி வளர்த்தமையால் பணியிடைநீக்கம், தாடியை மழித்தமையால் முஸ்லிம்களிடம் அதிருப்தி: ஆய்வாளரின் இரண்டக நிலை

ஆர்.ஷபிமுன்னா

உத்திரப்பிரதேசக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் இன்தஸார் அலி, தாடி வளர்த்தமையால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இது, தற்போது அந்த தாடியை மழித்ததால் உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

உபியின் பாக்பத் மாவட்டத்தின் ரமலா எனும் கிராமக் காவல்நிலையத்தில் இன்தஸார் அலி(50) என்பவர் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். இவர், மதரஸாக்கள் அதிகமுள்ள சஹரான்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.

உபி காவல்துறை ஒழுங்கு விதிகளை மீறும் வகையில் 6 அங்குல நீளத்தில் தாடி இன்தஸார் அலி வளர்த்திருந்தார். இதற்கு அனுமதியை அவர் பெறவில்லை என இன்தஸார் அலியை பாக்பாத் மாவட்ட எஸ்பியான அபிஷேக்சிங் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 22 ஆம் தேதி வெளியான இந்த உத்தரவால் சர்ச்சை கிளம்பியது. உபி மாநிலக் காவல்துறையின் ஒழுங்கு விதிகளின்படி தாடிக்கான அனுமதி சீக்கியர்களுக்கு மட்டும் உள்ளது.

தாடி வளர்ப்பதற்கானக் காரணத்தை தம் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து மற்ற மதத்தினர் அனுமதி பெற வேண்டும். காவல்துறையில் பணியாற்றும் அனைவரிடையே ஒரே மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்துவது இதன் காரணமானது.

1994 இல் இப்பணியில் இணைந்தது முதல் தான் தாடி வளர்ப்பதுடன் ஐந்துவேளை தொழுகையையும் தவறாமல் செய்வதாகக் கூறி இருந்தார் இன்தஸார். எனினும், தற்போது சர்ச்சையில் சிக்கிய தன் தாடியை வேறு வழியின்றி அடுத்த சில தினங்களில் அவர் மழித்தார்.

இந்த தகவலை எஸ்பி அலுவலகத்திற்கு அளித்ததை அடுத்து இன்தஸாரின் பணியிடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனால், மீண்டும் பணியில் இணைந்த இன்தஸார் அலி

தாடியை மழித்ததாலும், உபி முஸ்லிம்கள் இடையே ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி விட்டார்.

இது குறித்து தியோபத்தின் ஜாமியா பாத்திமா ஜோஹரா ஆங்கிலோ அரபிக் மதரஸாவின் உலாமாவான மவுலானா லுத்பர் ரஹமான் கூறும்போது, ‘ஷரீயத்தின்படி, முஸ்லிம்கள் தாடி வைக்காமல் இருப்பது பெரும் தவறு.

அதேசமயம், வைத்திருந்த தாடியை மழிப்பது என்பது அதைவிடத் தவறாகும். எனவே, உதவி ஆய்வாளர் இன் தஸார் அலி தன் தாடியை மழித்து பெரும் தவறு புரிந்துள்ளார். இதைவிட அவர் தன் பணியை ராஜினாமா செய்திருக்கலாம்.’ எனக் கருத்து கூறியுள்ளார்.

எனவே, தாடி வைத்ததால் பணியிடைநீக்கம் பெற்ற இன் தஸார் அலி மீதான சர்ச்சை, அதை எடுத்த பின்பும் தொடர்கிறது. தாடியால் எழுந்த சர்ச்சை மீது பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்து வந்த இன்தஸார் அதை மழித்த பின் அமைதி காக்கிறார்.

SCROLL FOR NEXT