இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது நிலம் வாங்கலாம்

பியர்சாதா ஆஹிக்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதால் இப்போது முதலீட்டாளர்களும், பிற மாநிலத்தை சேர்ந்த மக்களும் அங்கு நிலம் வாங்க முடியும்.

செவ்வாய்க்கிழமையன்று புதிய நிலச்சட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் காஷ்மீர் நிலங்கள் மீதான காஷ்மீர் மக்களின் ஏகபோக உரிமை முடிவுக்கு வருகிறது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிச் சட்டத்தின் படி ‘மாநிலத்தின் நிரந்தர குடிமக்களாக இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனை ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் இனி ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.

இந்தப் புதிய சட்டத்தின் சில அம்சங்கள்:

ஜம்மு காஷ்மீர் நிலங்கள் மீதான ஜம்மு காஷ்மீர் நிரந்தர குடிமக்களுக்கான ஏகபோக உரிமை முடிவுக்கு வருகிறது.

பிற மாநில மக்கள், முதலீட்டாளர்கள் அங்கு நிலம் வாங்கலாம்.

ஆனால் வேளாண் நிலத்தை வேளாண்மை அல்லாத பயன்களுக்கு பயன்படுத்த தடை உள்ளது.

சுகாதாரம் மற்றும் கல்விக்காக எந்த நிலத்தையும் எந்த ஒரு நபருக்கும் சாதகமாக மாற்றலாம்.

கார்ப்ஸ் கமாண்டர் மட்ட பதவியில் உள்ள ராணுவ உயரதிகாரி ஆயுதப்படைகளின் பயிற்சிக்காக, பயனுக்காக எந்த ஒரு இடத்தையும் ’ராணுவப் பகுதியாக’ அறிவித்து இணைத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் தனியான நிலச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவிருக்கிறது.

வேளாண் நிலத்தை விவசாயமல்லாத பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கிடையாது. மாவட்ட கலெக்டரிடமிருந்து அனுமதி இல்லாமல் இதைச் செய்ய முடியாது.

மத்திய அரசின் இந்த நகர்த்தலை ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளான தேசிய மாநாடு, பிடிபி கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

மெஹ்பூபா முப்தி கூறும்போது, “ஜம்மு காஷ்மீர் மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் இன்னொரு கள்ளத்திட்டம். எங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க நிலங்களை முதலில் விற்பனைக்கு விடுகிறது மத்திய அரசு. இதனை ஒன்றிணைந்து எதிர்ப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT