இந்தியா

திருச்சி நகைக்கடை கொள்ளை உட்பட பல்வேறு வழக்கில் தொடர்புடைய முருகன் மரணம்

இரா.வினோத்

திருச்சி நகைக்கடை கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் கைதான முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திருவாரூரை சேர்ந்த முருகன் (44) மீது திருச்சி, தஞ்சாவூரில் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பானசவாடி, மடிவாளா ஆகிய இடங்களில் வீடுகளில் முருகனும் அவரது குழுவினரும் கொள்ளையடித்தனர். இவ்வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஹரிசேகரன் தலைமையிலான போலீஸார் 2011-ம் ஆண்டு முருகனை கைது செய்தனர்.

இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த முருகன் ஹைதராபாத்தில் வங்கி மற்றும் நகைக்கடைகளில் கொள்ளையடித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இவ்வழக்கில் தெலங்கானா போலீஸார் 2015-ம் ஆண்டு முருகன் தலைமையிலான கொள்ளை கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, ரொக்கப்பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கிலும் ஜாமீனில் வெளியே வந்த முருகன் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் 17 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அண்ணாநகர் போலீஸார் முருகன், தினகரன், கோபால், ரகு உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

வெளியே வந்த முருகன் கடந்த ஆண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தார். இவ்வழக்கில் தமிழக போலீஸார் முருகனை தேடிய நிலையில், அவர் பழைய வழக்கில் பெங்களூரு போலீஸில் சரணடைந்தார். முரு கனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, விசாரித்த போது அவருக்கு எயிட்ஸ், நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில்முருகனின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து போலீஸார் திருவாரூரில் உள்ள முருகனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று மாலை பெங்களூரு வந்த அவரது மனைவி மஞ்சுளாவிடம் பிரேதப் பரிசோதனைக்கு பின் முருகனின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT