கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடனுக்கு 6 மாத காலத்துக்கு வட்டி மீதான வட்டி ரத்து சலுகை நவம்பர் 5-ம் தேதிக்குள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், நுகர்வோர் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட அனைத்து தவணைகளையும் செலுத்துவதற்கு 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு வட்டி மீதான வட்டி தொகையை மத்திய அரசு ஏற்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதன்படி ரூ.2 கோடிக்கும் குறைவான கடனுக்கு இந்த சலுகை அளிக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்படும். சலுகை காலத்தில் தவணையை செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த திட்டத்தின்படி அனைத்து நிதி நிறுவனங்களும் மார்ச் 1-ம்தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதிவரையிலான 6 மாத காலத்துக்கான சாதாரண வட்டி மற்றும் கூட்டு வட்டி விகிதத்தை கணக்கிட்டு, வட்டி மீதான வட்டி சலுகையை அளிக்க வேண்டும். அவ்விதம் கணக்கிடப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில்சேர்க்க வேண்டும். பின்னர் இதுகுறித்த விவரத்தை அரசுக்கு தாக்கல் செய்து அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இத்தொகையை அனைத்துநிறுவனங்களுக்கும் பாரத ஸ்டேட்வங்கி மூலமாக அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியைத் தொடர்ந்து அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு பிறப்பித்த உத்தரவில் ரூ.2 கோடிக்கும் குறைவான கடன் தொகைக்கு இந்த சலுகையை அளிக்குமாறு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 23-ம் தேதி வட்டி மீதான வட்டி சலுகையை அளிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அது எவ்விதம் செயல்படுத்தப்படும் என்பது தொடர்பானவிரிவான அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நவ.5-க்குள் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையின் பலன் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.