இந்தியா

மாட்டிறைச்சி ஆவணப் படத்தைத் திரையிட மத்திய அரசு தடை

செய்திப்பிரிவு

மாட்டிறைச்சி உண்ணும் பழக்கவழக்கங்களை காட்டும் ஆவணப்படத்தை திரையிட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.

நாளை (சனிக்கிழமை) புதுடெல்லியில் ஜீவிகா ஆசியா லைவ்லிஹுட் ஆவணப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஆவணப்படத்தை ஒளிபரப்ப தணிக்கை வாரியச் சான்றிதழ் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதுல் ஆனந்த் என்ற திரைப்பட இயக்குநர் தெரிவித்தார்.

காஸ்ட் ஆஃப் மெனு கார்ட் (Caste on Menu Card) என்ற இந்த ஆவணப்படம், மும்பையில் மாட்டிறைச்சி உண்ணும் கலாச்சாரத்தைப் பற்றியது.

இந்நிலையில் பொதுமக்கள் பார்வைக்கு திரையிடப்படும் ஆவணப்படங்களுக்கு விலக்குச் சான்றிதழ் அவசியம், இதனைப் பெற்றுவிட்டால் சென்சார் சான்றிதழ் தேவையில்லை. 35 படங்கள் அனுப்பப்பட்டதில் caste on menu card ஆவணப்படத்தை மத்திய அரசு நிராகரித்தது.

இது குறித்து விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஸ்னிக்தா வர்மா தி இந்து (ஆங்கிலம்) இதழுக்கு தெரிவிக்கும் போது, "படம் பற்றிய சுருக்க அறிமுகத்தில் மாட்டிறைச்சி பற்றி குறிப்பிட்டது குறித்து அமைச்சகத்துக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது” என்றார்.

சுருக்க அறிமுகத்தில், “மும்பையில் பசு-மாட்டிறைச்சி உண்ணும் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உணவு என்பது விலக்கி வைப்பதன் இடமாக மாறிவருகிறது என்ற கருத்தைச் சுற்றி இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகர மக்களிடையே இருந்து வரும் உணவுப் பழக்கவழக்க தெரிவுகளில் சாதி வேறுபாடுகளின் உருவாக்கம் ஆதிக்கம் செலுத்துவதையும், வாழ்வாதாரம், சமூக உள்ளடக்கம், மற்றும் மனித உரிமைகளை இந்த ஆவணப்படம் சித்தரிக்கிறது.நம் நாட்டின் மாட்டிறைச்சி உண்ணுவதில் உள்ள புராண மற்றும் வரலாற்று வேர்களை தேடிச் செல்வதன் மூலம் சமூகப் படிநிலைகளை உருவாக்கிய பிராமணீயத்தின் விருப்பங்களும் அதன் மீறல்களையும் விவாதப் பொருள் ஆக்கியுள்ளது.

தோல் பதனிடும் தொழிற்துறை மற்றும் இறைச்சி தொழிற்துறை ஆகியவற்றின் அரசியல் பொருளாதாரத்தை கையாள்வதில் மேற்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து இதனை காணலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT