மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்: கோப்புப் படம். 
இந்தியா

பாஜக தலைவர் விஜய் வர்க்கியா, காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிடிஐ

பாஜக தலைவர் விஜய் வர்க்கியா, காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத் ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிப் பேசியதாகப் புகார் எழுந்ததது. இதையடுத்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த மூன்று தலைவர்களும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

மத்தியப் பிரதேச மாநில இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத் இருவரும் ஈடுபட்டனர். கடந்த 14-ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் இரு தலைவர்கள் தேர்தல் நடத்த விதிகளை மீறிப் பேசியுள்ளனர். இது தொடர்பாக மத்தியப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, பாஜக தலைவர் விஜய் வர்க்கியாவும் மத்தியப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் எதிர்க்கட்சியினரை விமர்சித்ததையடுத்து, அவருக்கும் நோட்டீஸ் அனுப்பி தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “பாஜக தலைவர் விஜய் வர்க்கியா, காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், கமல்நாத் ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிப் பேசியதாக ஆதாரங்களுடன் புகார் வந்துள்ளது.

இந்தப் புகாருக்கு உரிய விளக்கத்தை 48 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கமல்நாத், கடந்த வாரம் குவாலியர் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்டடபோது பாஜக பெண் வேட்பாளர் இமார்தி தேவியை அவமரியாதையாகப் பேசினார். இது தொடர்பாக இமார்தி தேவி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது. மேலும், ‘‘பெண் வேட்பாளர் ஒருவரைத் தரக்குறைவாக முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான கமல்நாத் பேசியது முறையல்ல. பொதுவெளியில் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அந்த வார்த்தை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறானது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கமல்நாத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “ நானும், நான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் பெண்கள் மீது உயர்ந்த மரியாதையை வைத்துள்ளோம். அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவதுதான் அதிகமான முன்னுரிமை கொடுக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT