கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் வெளிச் சந்தையில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயத்தை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உயர்ந்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக நவம்பர் மாதத்திலிருந்து, சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (சப்ளை-கோ), கேரள மாநிலக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, கேரள மாநிலத் தோட்டக்கலைத் தயாரிப்புகள் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் பொறுப்பில் செயல்படும் அங்காடிகளில் வெங்காயத்தை ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்கக் கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “மாநிலத்தில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பொருட்டு உணவு மற்றும் சிவில் வழங்கல், வேளாண்மை மற்றும் நிதித்துறை அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசு சார்பு நிறுவனங்களான சப்ளை கோ, ஹார்டிகார்ப் மற்றும் நுகர்வோர் மத்திய வங்கி ஆகியவை 1,800 டன் வெங்காயத்தை இந்தியத் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பிலிருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இதன்படி ‘சப்ளை கோ’ 1000 டன் வெங்காயத்தையும், நுகர்வோர் மத்திய வங்கி 300 டன் வெங்காயத்தையும், ஹார்டிகார்ப் 500 டன் வெங்காயத்தையும் கொள்முதல் செய்யும். இப்படிக் கொள்முதல் செய்யப்படும் வெங்காயமானது நவம்பர் முதல் வாரத்தில் சந்தைக்கு விற்பனைக்கு வரும்” என்று தெரிவித்தார்.