பிஹார் தேர்தலில் அனைத்து கட்சிகளிலும் குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் போட்டியிடுவது தொடர்கிறது.
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் அனந்த் சிங். இவர் ஜேடியு, சுயேச்சை என 4 முறை மொகாமா தொகுதியின் எல்எல்ஏவாக இருந்தவர். இந்தமுறை லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி சார்பில் மீண்டும் மொகாமா தொகுதியில் போட்டியிடுகிறார். கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் சிக்கி பாகல்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அனந்த்சிங்.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் இவர், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஜாமீன் பெற்று வந்திருந்தார். இவர் சார்பில் மனைவி நீலம் சிங் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அனந்த் சிங்கை எதிர்த்து குற்றப்பின்னணி பட்டியலில் இடம்பெற்றுள்ள அவரது முக்கிய எதிரியான ராஜீவ் லோச்சன் சிங், பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இதுதவிர நவாதா மற்றும் சந்தேஷ் தொகுதிகளில் ஆர்ஜேடி சார்பில் விபா தேவி மற்றும் கிரண் தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர். முறையே இவர்களது கணவர்களான ராஜ வல்லப் பிரசாத் யாதவ் மற்றும் அருண் யாதவ் ஆகியோர் சிறையில் உள்ளனர். பேலாகன் தொகுதியில் பிரபல கிரிமினலான சுரேந்திர யாதவ் ஆர்ஜேடி சார்பில் போட்டியிடுகிறார்.
ஜேடியு சார்பில் கயாவின் அட்ரி தொகுதியில் மனோரமா என்பவர் போட்டியிடுகிறார். இவர் சிறையில் இருக்கும் பிண்டி யாதவின் மனைவி. இவருடைய வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு மனோரமாவும் சிறையில் இருந்து பிறகு ஜாமீன் பெற்றவர். இதுபோல், முக்கிய கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத குற்றப் பின்னணி கொண்ட பலர் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளனர்.
சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தியின் (எல்ஜேபி) மாநில துணைத்தலைவராக இருந்தவர் சுனில் பாண்டே. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி ஜாமீனில் உள்ளார். போஜ்பூர் மாவட்டத்தின் தராரி தொகுதியில் எல்ஜேபி சார்பில் 4 முறை எல்எல்ஏவாக இருந்தவர். இந்த முறை அங்கு பாஜக வேட்பாளர் போட்டியிடுவதால் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என எல்ஜேபி கூறியது. இதனால், கட்சியில் இருந்து விலகிய சுனில், சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
ஆர்ஜேடியில் வாய்ப்பு கிடைக்காததால் கிரிமினலான சுனில் யாதவ், பாட்னாவில் பாலிகஞ்ச் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். தொடரும் இப்பட்டியலில் அடுத்த இரு கட்டங்களாக நவம்பர் 3 மற்றும் 7-ல் நடைபெறவுள்ள தேர்தலிலும் சிறையில் உள்ள பல கிரிமினல்கள் போட்டியிட காத்திருக்கின்றனர். இதில் முகமது சஹாபுதீன், அனந்த் மோகன், ரமா சிங், ரண்வீர் யாதவ், அவ்தேஷ் மண்டல் மற்றும் அம்ரேந்தர் பாண்டே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.