இந்தியா

லடாக்கில் சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது ராணுவம்: விஜயதசமி விழாவில் பாகவத் கருத்து

செய்திப்பிரிவு

லடாக்கில் சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில் நேற்று முன்தினம் விஜயதசமி விழா நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

ஆணவம், காலனி ஆதிக்க ஆசையில் செயல்படும் சீனா, எல்லையில் (லடாக்) நமது மண்ணை ஆக்கிரமிக்க முயன்றது. அப்போது சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதை சீனா எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் பதிலடியால் அந்த நாடு திகைத்துப் போயுள்ளது.

சீனாவின் மண் ஆசை அனைத்து நாடுகளுக்கும் தெரியும். தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை ஆக்கிரமிக்க சீனா இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் வீரத்தை பார்த்து இதர நாடுகளும் சீனாவுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் எழுப்பப் தொடங்கியுள்ளன. இந்தியர்களின் தேசப்பற்று, ஒற்றுமையைப் பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன. அனைத்து நாடுகளுடனும் இந்தியா நட்பு பாராட்டுகிறது. இது நமது இயல்பு. இதை யாராவது பலவீனமாகக் கருதினால் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும். சீனாவைவிட இந்தியா மிகப்பெரிய நாடாக உருவெடுக்க வேண்டும்.

மியான்மர், இலங்கை, வங்கதேசம், நேபாளத்துடனான உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும். சீனாவுக்கு எதிராக ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

விவசாயிகளின் நலன் கருதி 3 வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராக சிலர் உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்மையில் வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

SCROLL FOR NEXT