பிஹார் சட்டப்பேரவைக்கு நாளை முதல், 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முசாபர்பூர் மாவட்டம், சக்ரா என்ற இடத்தில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் அசோக் குமார் சவுத்ரிக்கு முதல்வர் நிதிஷ் குமார் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர், லாலுவின் மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத்தை மறைமுகமாக குறிப்பிட்டு பேசும்போது, “சில தலைவர்கள் எனக்கு எதிராக பேசுவதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அவர்கள் அவ்வாறே செய்யட்டும். எனக்கு எவ்வித விளம்பரத்திலும் விருப்பம் இல்லை.
பிஹாரின் வளர்ச்சிக்காக நான் பாடுபட்டு வருகிறேன். நீங்கள் மற்றொரு வாய்ப்பு கொடுத்தால் அப்பணியை தொடருவேன். சிலருக்கு தங்கள் மகன்கள், மகள்கள் என குடும்ப நலனே முக்கியம். ஆனால் எனக்கு ஒட்டுமொத்த பிஹார் மக்கள்தான் எனது குடும்பம். அவர்களின் நலனுக்காகவே நான் பாடுபட்டு வருகிறேன்.
கடந்த 15 ஆண்டுகளாக பிஹாரின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளோம். உங்களின் வாழ்க்கையை மேம்படுத்த இன்னும் நிறைய வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. நீங்கள் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் அந்த வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்துவோம். ஒவ்வொரு கிராமத்திலும் சூரியசக்தி தெரு விளக்குகள் அமைக்கப்படுவதை உறுதிப்படுத்துவோம்” என்றார்.