வட மாநிலங்களில் அறுவடை முடிந்த பிறகு காய்ந்த வைக்கோல்களை விவசாயிகள் எரிப்பதால் காற்று மாசடைந்து டெல்லியில் புகை மண்டலம் உருவானது. இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹரியாணா, உ.பி., பஞ்சாப் மாநிலங்களில் வைக்கோல் எரிப்பைத் தடுத்து காற்று மாசைக் கட்டுப் படுத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையில் ஒரு நபர் குழுவை நியமித்து கடந்த 16-ல் உத்தரவிட்டது.
இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘வைக்கோல் எரிப்பால் காற்று மாசை தடுக்க மத்திய அரசு மூன்று அல்லது நான்கு நாட்களில் புதிய சட்டம் கொண்டுவர உள்ளது. எனவே, முன்னாள் நீதிபதி லோகுர் கமிட்டியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்ற நீதிபதிகள், அரசின் கோரிக்கையை ஏற்று நீதிபதி லோகுர் குழு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.